தெலுக் இந்தான், பிப்.28-
பேரா, பகான் டத்தோ கடற்பகுதியில் 41 இந்தோனேசியப் பிரஜைகள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவதற்கு உடந்தையாக இருந்ததாக 5 டாக்சியோட்டிகள் மற்றும் நான்கு படகுகாரர்கள் தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
படகுக்காரர்களான 25 வயது சுலைமான் டோடி, 35 வயது ரூடி ஹர்துனோ, 38 வயது அஹ்மாட் மற்றும் ஓர் இந்தோனேசியப் பிரஜையான 28 வயது அஹ்மாடானி ஆகியோர் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
படகிலிருந்து இவர்கள் கரையிறக்கிய இந்தோனேசியர்களை, சந்தடியின்றி இலக்குக்குரிய இடத்திற்கு கொண்டுs செல்ல டாக்சி சேவையை வழங்கி, சட்டவிரோத நடவடிக்கைக்கு துணை நின்றதாக 35 வயது எம். லோகநாதன், 47 வயது ஏ. நாகேந்திரன், 61 வயது R. Kaleingarada, 45 வயது சி. சசிகுமார் மற்றும் 51 வயது டி. ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் பேரா, பகான் டத்தோ மாவட்டத்திற்கு உட்பட்ட ருங்குப், பந்தாய் சுங்கை தியாங் கடற்கரையில் இந்த ஒன்பது பேரும் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் ஒன்பது பேரும் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளனர்.