வாடிக்கையாளர்கள் களவாடல் : பயண நிறுவன ஏஜெண்டுக்கு அரிவாள் வெட்டு

கோத்தா கினபாலு, மார்ச்.01-

தனக்குச் சொந்தமான வாடிக்கையாளர்களைக் களவாடி விட்டதாகக் கூறி, நியாயம் கேட்க சென்ற பயண நிறுவன ஏஜெண்டு ஒருவர் அரிவாள் வெட்டு காயத்திற்கு ஆளாகினார்.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை சபா, பாபார், பெரிங்கிஸ், சுங்கை கம்போங் காவாங்கில் நிகழ்ந்தது. அரிவாள் வெட்டுக்கு ஆளான ஏஜெண்டு , சந்தேகப் பேர்வழியின் அலுவலகத்திற்குச் சென்று, பயணக் கட்டணங்களை அடிமட்ட விலைக்கு நிர்ணயித்து, தன்னுடைய கொரிய சுற்றுப்பயணிகளைக் களவாடி விட்டதாக நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது நடந்த கடும் வாக்குவாதத்தில் 33 வயது சந்தேகப் பேர்வழி தனது காருக்கு சென்று அரிவாள் கத்தியை எடுத்து வந்து, அந்த ஏஜெண்டைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

கடும் காயங்களுக்கு ஆளான அந்த ஏஜெண்டு, பொது மக்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள வேளையில் 33 வயது சந்தேகப் பேர்வழியை போலீசார் கைது செய்து இருப்பதாக பாபார் மாவட்ட போலீஸ் தலைவர் கமாருடின் அம்போ சக்கா தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS