கோலாலம்பூர், மார்ச்.01-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 417.9 ஆவது கிலோ மீட்டரில் உலு சிலாங்கூர் அருகில் ஒரு காரும், டிரெய்லர் லோரியும் சம்பந்தப்பட்ட விபத்தில் காரில் பயணித்த இருவர் உயிரிழந்த வேளையில் மற்றொருவர் படுகாயத்திற்கு ஆளாகினார்.
இவ்விபத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் நிகழ்ந்தது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த புரோட்டன் வீரா ரக கார், சாலைத் தடுப்பை மோதி, தடம் புரண்டு, டிரெய்லர் லோரி திக்கை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டதால் அந்த கனரக வாகனத்தினால் மோதப்பட்டு, சின்னாபின்னமானது.
இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அதன் ஓட்டுநர், பயணி கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி, கடும் காயங்களுக்கு ஆளாகி சுங்கை பூலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட துணை போலீஸ் தலைவர் முகமட் அஸ்ரி முகமட் யூனோஸ் தெரிவித்தார்.
18,19,20 வயதுடைய மூன்று இளைஞர்கள், கோலாலம்பூரிலிருந்து உலு பெர்ணத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.