சுபாங் ஜெயா, மார்ச்.01-
சுபாங் ஜெயா, SS 16 இல் உள்ள ஒரு கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்த ஜப்பானியப் பெண், உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று காலை 8 மணியளவில் நிகழ்ந்தது.
50 வயது மதிக்கத்தக்க ஜப்பானியப் பெண் தலையில் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் தொடர்பாக காலை 8.07 மணியளவில் MERS 99 ஓர் அவசர அழைப்பைப் பெற்றது.
சம்பவ இடத்திற்கு முதலில் விரைந்த ரோந்துப் போலீசார் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றத்தன்மை நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. சம்பந்தப்பட்ட ஜப்பானிய மாது கடந்த 14 ஆண்டு காலமாக மலேசியாவில் தனது கணவருடன் வசித்து வந்ததாக அறியப்படுகிறது என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.