இபிஎப். லாப ஈவு, 6.3 விழுக்காடு அறிவிக்கப்பட்டு இருப்பது, மடானி அரசாங்கத்தின் வெற்றியை நிரூபிக்கிறது

கோலாலம்பூர், மார்ச்.01-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். தனது சந்தாதாரர்களுக்கு இன்று 6.3 விழுக்காடு லாப ஈவை அறிவித்து இருப்பதானது, மடானி அரசாங்கத்தின் வெற்றியை நிரூபிக்கிறது என்று ஊராட்சி மன்ற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

6.3 விழுக்காடு லாப ஈவு என்பது, வழக்கத்திற்கு மாறானதாகும். 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு இபிஎப். தனது சந்தாதாரர்களுக்கு மிக அதிகமான லாப ஈவு வழங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த தனது நிதி ஆண்டில் முதலீட்டு வருவாய் மட்டும் 74.46 பில்லியன் ரிங்கிட் என்று இபிஎப். அறிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 11 விழுக்காடு உயர்வாகும். அவ்வாண்டில் 66.99 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு வருமானத்தை இபிஎப் பதிவு செய்து இருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மிகப் பெரிய நிதி அமைப்பைக் கொண்டுள்ள தொழிலாளர்களின் அந்திம கால சேமிப்புப் பணத்தை நிர்வகித்து வரும் இபிஎப். தனது சந்தாதாரர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் லாப ஈவை அறிவித்து இருப்பது மூலம் நாட்டின் பொருளாதாரம் சரியான தடத்தில் உள்ளது என்பதை நிரூபிக்கிறது என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS