கோலாலம்பூர், மார்ச்.01-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், ரத்தக் கொதிப்புக்கு ஆளாகி, தனது வீட்டில் மயக்கமுற்று கீழே விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு சில தினஙகளுக்கு முன்புதான், அவரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது என்ற திடுக்கிடும் தகவல் அம்பலமாகியுள்ளது.
இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நாட்டின் ஒன்பதாவது பிரதமராகப் பொறுப்பேற்ற 14 மாதங்களில், அவர் தலைமையில் நடைபெற்ற கெலுவார்கா மலேசியா எனும் மலேசியக் குடும்பம் பிரச்சாரத்திற்கு அரசாங்கப் பணம் செலவிடப்பட்டது தொடர்பில் அவரிடம் எஸ்பிஆர்எம், இந்த விசாரணையை நடத்தியது.
அந்த ஐந்து மணி நேரம் விசாரணை முடிவடைந்து, இஸ்மாயில் சப்ரியிடம் மீண்டும் விசாரணை நடத்துவற்கு எஸ்பிஆர்எம் திட்டமிட்டு இருந்த வேளையில் அவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் அளவிற்கு நிலைமை மோசமாகியது.
இஸ்மாயில் சப்ரியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னரே அவருக்கு மிக நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் அவரின் நம்பிக்கை மிகுந்த நான்கு மூத்த முன்னாள் அதிகாரிகளை எஸ்பிஆர்எம் கைது செய்தது. கைது செய்யப்பட்ட நான்கு அதிகாரிகளில் ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம், தங்க நகைகள் என 100 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்களை எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்தது.
இஸ்மாயில் சப்ரி மற்றும் அவரின் நான்கு முன்னாள் மூத்த உதவியார்கள் அனைவரும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கள்ளப் பணம் பரிமாற்றம் அடிப்படையில் எஸ்பிஆர்எம் விசாரணை செய்து வருகிறது.
இதனிடைய பொது மக்களின் பணத்தைக் கோடிக் கணக்கில் சுருட்டி விட்டு, அனுதாபத்தைத் தேடுவதற்கு முற்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார்.
சுய லாபத்திற்காக நாட்டின் பொது வளங்களைச் சுரண்டும் அரசியவாதிகளையும், உயர் அதிகாரிகளையும் அன்வார் கடிந்து கொண்டார்.