ஜெராந்துட், மார்ச்.02-
இன்று பகாங், ஃபெல்டா கோத்தா கெலாங்கி, அருகேயுள்ள சுங்கை சியாமில் மாற்றுத்திறனாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். 16 வயதான முகமட் அமீர் முர்ஷிட் ஷம்லி என்ற அந்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கும்போது மூழ்கியதாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படவில்லை. இன்று காலை 11.55 மணியளவில் அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவரால் உடல் கண்டெடுக்கப்பட்ட பின்னரே இந்த சம்பவம் தெரியவந்தது. அவரது மூன்று நண்பர்களும் உதவத் துணியவில்லை. சம்பவத்திற்குப் பிறகு, மூவரும் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறி, யாருக்கும் தெரிவிக்காமல் சம்பவத்தை மறைக்க முயன்றதாக ஜெராந்துட் மாவட்டக் காவல் துறைத் தலைவர் , சுப்ரிண்டெண்டன் ஸுக்ரி முகமட் தெரிவித்தார்.
உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவ சம்பவத்தின் அனைத்து சாட்சிகளையும் காவல் துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெராந்துட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.