புத்ராஜெயா, மார்ச்.03-
புனித நோன்பு மாதம் தொடங்கிய வேளையில் நோன்பு மாதத்தைப் பயன்படுத்தி வழங்கப்படும் அன்பளிப்புகளில் அரசாங்க இலாகாக்கள் மற்றும் ஏஜென்சிகள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
ஆடம்பரத்திற்கும், அழகுக்கும் செலவிடப்படும் தொகையை உதவித் தேவைப்படக்கூடிய மக்களுக்கு பயன்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
நோன்பு மாதத்தில் வழங்கப்படும் பேரிச்சம் பழத்தின் விலையை விட அதனை உள்ளடக்கும் அட்டைப் பெட்டி அதிக விலையாகப் பார்க்கப்படுகிறது. இது போன்ற அனாவசிய செலவுகளைத் தவிர்க்குமாறு அரசாங்க இலாகாக்களுக்கும், ஏஜென்சிகளுக்கும் பிரதமர் வலியுறுத்தினார்.
இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறை பணியாளர்கள் மத்தியில் மாதந்திர பேரணி நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் இந்த நினைவூட்டலை வழங்கினார்.