கோலாலம்பூர், மார்ச்.03-
தனக்கு நம்பமாக முன்னாள் உதவியாளர் வீட்டிலிருந்து கோடிக்கணக்கான ரிங்கிட் மற்றும் பல கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டது தொடர்பில் நாட்டின் ஒன்பதாவது பிரதமராக பொறுப்பு வகித்த டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கேப்பிற்கு எதிரான விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பிடி இறுகியது.
ரத்தக் கொதிப்புக்கு ஆளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 65 வயதான இஸ்மாயில் சப்ரி, நாட்டின் பிரதமராக இருந்த 14 மாதங்களில் அவரின் உதவியாளருக்கு கோடிக்கணக்கான ரிங்கிட் பணமும், தங்கக் கட்டிகளும் எவ்வாறு கிடைத்து என்பது குறித்து ஆராய, அவரின் கண் விழிப்புக்காக எஸ்பிஆர்எம் காத்திருக்கிறது.
அவர் மயக்கம் அடைந்து, மருத்துவனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னதாக சில தினங்களுக்கு முன்பு எஸ்பிஆர்எமின் 5 மணி நேர விசாரணைக்கு ஆளாகிய இஸ்மாயில் சப்ரியிடம் அடுத்த விசாரணைக்கு ஊழல் தடுப்பு ஆணையம் தயாராகியிருப்பதாக அதன் வட்டாரம் தெரிவித்துள்ளது.
தனது 14 மாத ஆட்சியில் ஒரே குடும்பம் என்ற பெயரில் இஸ்மாயில் சப்ரி தொடங்கிய மாபெரும் பிரச்சாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசாங்கப் பணம் பெரும் பகுதி, அவரின் நம்பகமான உதவியாளர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
இஸ்மாயில் சப்ரியின் நான்கு முன்னாள் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் ஆகக் கடைசியாக அவரின் முக்கிய உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பெரிய பெரிய பைகளில் 170 மில்லியன் ரொக்கம் மற்றும் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதை எஸ்பிஆர்எம் உறுதிப்படுத்தியது.