புதுடெல்லி, மார்ச்.03-
டெல்லி, கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவன் வகுப்பு இறுதித் தேர்வை எழுத விருப்பமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடக்க பள்ளியில் பயின்று வந்த அம்மாணவன், ஆண்டு இறுதித் தேர்வை எழுத தனக்கு மனம் இல்லை என்பதால் வீட்டை விட்டுச் செல்வதாகவும் தம்மைத் தேட வேண்டாம் எனவும் தமது தந்தைக்கு கடிதம் எழுதியிருந்ததும் தெரிய வந்துள்ளது.
அவனது தந்தை புகார் அளிக்க போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அச்சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி சுமார் 2, 000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து தமிழகம்-கர்நாடக எல்லை அருகே உள்ள கிருஷ்ணகிரி பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் அங்கு சென்று அச்சிறுவனை மீட்டனர்.
பெங்களூருவில் தெரிந்த ஒருவரைத் தொடர்பு கொண்டு ரயில் மூலம் அங்கு சென்ற அச்சிறுவன், தமிழ்நாடு-கர்நாடக எல்லை அருகே உள்ள கட்டுமானப் பகுதியில் கூலி வேலை செய்யத் தொடங்கியதும் தெரிய வந்துள்ளது. அங்கு குடிசையில் வசித்து வந்த அச்சிறுவனைப் போலீசார் மீட்டனர்.