கோலாலம்பூர், மார்ச்.03-
சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட தங்களின் உள்ளடக்கம், அகற்றப்படுமானால், அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் சவால் விட முடியும் என்று தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் உள்ளடக்கம் அகற்றப்படும் பட்சத்தில் அது குறித்து சவால் விடுவதற்கும் புகார் செய்வதற்கும் தொடர்புத்துறை அமைச்சு ஒரு தளத்தை ஏற்படுத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தங்களின் உள்ளடக்கம் ஏன் அகற்றப்பட்டு இருக்கக்கூடாது என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அந்த தளத்தில் தங்கள் தற்காப்பு வாதத்தை முன்வைக்கலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
எந்தவொரு உள்ளடக்கத்தையும் அகற்றுவது என்பது தொடர்பு, பல்லூடக ஆணையமான MCMC –யின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். அதன் முடிவில் அதிருப்தி கொண்டவர்கள் சவால் விட முடியும் என்று மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு துணை அமைச்சர் தியோ மேற்கண்டவாறு பதில் அளித்தார்.