பெட்டாலிங் ஜெயா, மார்ச்.03-
நாட்டின் மத்திய வங்கியான பேங்க் நெகாராவின் கவர்னராக பதவி வகித்த போது 1MDB நிறுவனத்திலிருந்து கோடிக்கணக்கான ரிங்கிட் வெளிநாட்டு வங்கிகளுக்கு மாற்றப்படுவதற்கு துணை நின்றவர் என்று கூறப்படும் டான்ஶ்ரீ ஸெத்தி அக்தார் அஸிஸை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டும் அளவிற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது.
மலேசிய மத்திய வங்கியின் முதலாவது பெண் கவர்னராக பொறுப்பேற்று இருந்த ஸெத்தி, தனதுஅதிகாரத்தைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கான ரிங்கிட்டை வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு மாற்றுவதற்கு சந்தேகப் பேர்வழிகளுக்கு அனுமதி வழங்கினார் என்ற குற்றச்சாட்டு இருந்தும், அவர் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவில்லை என்று கெப்போங் எம்.பி. லிம் லிப் எங் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் சாயிட், அந்த முன்னாள் கவர்னர் விவகாரத்தில் சட்டத்துறை அ லுவலகம் கொண்டுள்ள நிலைப்பாட்டை விளக்கினார்.
அதேவேளையில் ஸெத்தி, அவரின் கணவர் தௌவிக் அய்மான் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கையைத் திறப்பதற்கு சட்டத்துறை அலுவலகம் நோக்கம் கொண்டிக்கவில்லை என்பதையும் அஸாலினா தெளிவுபடுத்தினார்.