புத்ராஜெயா, மார்ச்.03-
ஒரே குடும்பம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து, அரசாங்கப் பணத்தைச் செலவிட்டது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, முக்கியச் சந்தேகப் பேர்வழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் தொடர்பில், நாளை மறுநாள் புதன்கிழமை, இஸ்மாயில் சப்ரி, மீண்டும் எஸ்பிஆர்எம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 177 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணம் மற்றும் தங்கக்கட்டிகள், இஸ்மாயில் சப்ரிக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து அந்த முன்னாள் பிரதமர் விளக்கியாக வேண்டும்.
இதன் தொடர்பில் வரும் புதன்கிழமை, இஸ்மாயில் சப்ரியிடம் எஸ்பிஆர்எம் மீண்டும் விசாரணை நடத்தும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
177 மில்லியன் ரிங்கிட் பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் இஸ்மாயில் சப்ரி, ஒரு முக்கிய சந்தேகப் பேர்வழியாவார். எனவே எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் அந்த பணத்தை அவர் எந்த ரூபத்தில் பெற்றார் என்பதற்கு பதில் தர வேண்டும் என்று புத்ராஜெயாவில் எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாம் பாக்கி இதனைத் தெரிவித்தார்.
இஸ்மாயில் சப்ரிக்கு மிக நெருக்கமான நான்கு முன்னாள் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இந்தப் பணம் கைப்பற்றப்பட்டது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வீட்டில் இந்தப் பணத்தை இஸ்மாயில் சப்ரி மறைத்து வைத்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
தாம் பிரதமராக இருந்த போது இஸ்மாயில் சப்ரி முன்னெடுத்த ஒரே குடும்பம் என்ற பிரச்சாரத்தில் பெரும் பணத்தை அவர் மடைமாற்றம் செய்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.