ஈப்போ, மார்ச்.03-
மஇகா தேசிய உதவித் தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம். இராமசாமி தலைமையில் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட “ஏம்ஸ்ட் நமது தேர்வு” எனும் முயற்சி மாபெரும் வெற்றியை தந்துள்ளது.
பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் சுமார் 1,121 மாணவர்களுடன் 487 பெற்றோர்களும் மற்றும் நிகழ்வின் 250 ஏற்பாட்டளர்களும் கலந்து கொண்டனர்.
“ஏம்ஸ்ட் நமது தேர்வு” எனும் உன்னதமான சிந்தனைத் தோன்றிய கனமே டான் ஸ்ரீ எம் இராமசாமி, தனது நிர்வாக குழுவினரின் ஆதரவுடன் கடந்த ஒரு மாத காலமாக இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிகழ்வில் முறையே 1000 மாணவர்கள் கலந்துகொள்வதை உறுதி செய்ய சில யுக்திகளை வகுத்து, மிக நேர்த்தியான ஏற்பாடுகளை டான்ஸ்ரீ இராமசாமி உறுதிச் செய்தார்.
இந்நிகழ்வு தொடர்பான விவரங்கள் ஊடகங்கள் மூலமாக பரப்புவதிலும்,பள்ளிகளைத் தொடர்புக் கொள்வதிலும், தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கம் அளிப்பதிலும் தேவையான முன்னெடுப்புகளை டான்ஸ்ரீ இராமசாமி மேற்கொண்டார்.
ஏற்பாட்டு வேலைகளைத் துரிதப்படுத்த மாணவர்களின் பதிவுகள் இணையம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு பதிவு செய்ததில் மாணவர்களின் வருகை மற்றும் எண்ணிக்கை முறையே உறுதிச் செய்யப்பட்டன.
இந்நிகழ்வோட்டம் நேர்த்தியாகவும் சிறப்பான முறையில் நடந்தவும் அனைத்துத் தொகுதி தலைவர்களும் ஏற்பாட்டு குழுவினரும் உறுதுணையாக இருந்தனர்.
இந்நிகழ்வு வெற்றியடைய பெரும் ஆதரவு வழங்கிய ஏம்ஸ்ட் பல்கலைகழகத்தின் வேந்தர் டான் ஸ்ரீ S.A டாக்டர் விக்னேஸ்வரன் மற்றும் துணை வேந்தர் டத்தோ ஸ்ரீ மு.சரவணன் அவர்களுக்கு டான் ஸ்ரீ எம் இராமசாமி தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.