கோலாலம்பூர், மார்ச்.03-
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையில் இலக்கவியல் அமைச்சு தொடர்ந்து வழிகாட்டும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம், பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சிகள், துறை சார்ந்தோருடன் கலந்துரையாடல், பிற துறையைச் சார்ந்தவர்களோடு ஒத்துழைப்பு என இலக்கவியல் அமைச்சு தீவிரமாகத் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறது என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
குறிப்பாக, வேலையிடத்தில் செயற்கை நுண்ணறிவு எனும் கருப்பொருளில் அரசு ஊழியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சிகளை வழங்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 445,000 பேர் பயனடைவர் என்று அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இன்று மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதி வரை 300 பேருக்கு தேசிய இலக்கவியல் இலாகா நுண்ணறிவுத் திறன் பட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பட்டறையில் இலக்கவியல் அமைச்சு பணியாளர்கள் மட்டும் அல்லாது, பிற அமைச்சிலிருந்தும், அரசாங்க ஏஜென்சி-களிலிருந்தும் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ‘மலேசியாவின் எதிர்காலத்துக்கு செயற்கை நுண்ணறிவு’ எனும் திட்டத்தை Microsoft நிறுவனத்துடன் இணைந்து இலக்கவியல் அமைச்சு ஏற்பாடு செய்தது. மொத்தம் 800,000 உள்நாட்டுப் பணியாளர்களுக்கு இந்த வாய்ப்பு வழக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு ஆதிக்கத்தால், எதிர்காலத்தில் 10 முக்கியத் துறைகளில், 620,000 பேரின் வேலையில் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை மனிதவள அமைச்சு வெளிப்படுத்தியிருந்த நிலையில், கோபிந் சிங் அதற்கான முன்னேற்பாட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளார்.