இஸ்மாயில் சப்ரியிடம் எஸ்பிஆர்எம் விசாரணை – அரசியல் நோக்கம் கொண்டது அல்ல

புத்ராஜெயா, மார்ச்.03-

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பாதுகாப்பான வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் ரொக்கப்பணம் மற்றும் தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை, அரசியல் நோக்கம் கொண்டது அல்ல என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெளிவுபடுத்தியுள்ளார்.

அதே வேளையில், குறிப்பிட்ட தரப்பினரின் உத்தரவு அடிப்படையிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்படுவதையும் அஸாம் பாக்கி மறுத்துள்ளார்.

கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரு சாட்சி என்று அடையாளம் காணப்பட்ட இஸ்மாயில் சப்ரி தற்போது முக்கியச் சந்தேகப் பேர்வழியாக வகைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாளை மறுநாள் அந்த முன்னாள் பிரதமரை எஸ்பிஆர்எம் மீண்டும் விசாரணை செய்யவிருக்கிறது.

இந்த விசாரணைகள் அனைத்தும் எந்தவொரு தரப்பினரின் உத்தரவால் மேற்கொள்ளப்பட்டது அல்ல. மாறாக, உளவுத்துறை அணுக்கமாக மேற்கொண்ட கண்காணிப்பின் விளைப் பயனே, இஸ்மாயில் சப்ரியின் நான்கு முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் என்று அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.

எனினும் இஸ்மாயில் சப்ரி சம்பந்தப்பட்ட இந்த விசாரணையானது, ஒரு முன்னாள் பிரதமர் என்ற அவரின் பதவி மற்றும் அந்தஸ்தைப் பார்க்காமல் நேர்மையாகவும், நிபுணத்துவ அடிப்படையிலும் நடத்தப்படும் என்று அஸாம் பாக்கி உறுதி அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS