பெட்டாலிங் ஜெயா, மார்ச்.04-
எஸ்பிஆர்எமின் உடும்புப் பிடியில் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நாட்டின் பிரதமராக இருந்த போது, தொடர்புத்துறைக்காக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே, ஒரு கோடி ரிங்கிட் பெற்று இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தைக் காட்டும்படி அம்னோ இளைஞர் பிரிவு இன்று சவால் விடுத்துள்ளது.
உண்மையிலேயே டாக்டர் அக்மாலின் வங்கிக் கணக்கில் இஸ்மாயில் சப்ரி வழங்கிய ஒரு கோடி ரிங்கிட் நுழைந்து இருக்குமானால் அதற்கான வங்கி சிலிப்பை காட்டுங்கள், இல்லையேல், எஸ்பிஆர்எமிடம் புகார் செய்யுங்கள் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரை அம்னோ இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் முகமட் சொல்லேஹின் முகமட் தாஜீ கேட்டுக் கொண்டார்.
இதனிடைய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டது மற்றும் 177 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம், தங்கக் கட்டிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் வாய் திறக்காமல் இருப்பது குறித்து வலைவாசிகள் பலர் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.