கோலாலம்பூர், மார்ச்.04-
எரா FM வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர்கள், தைப்பூசக் காவடி நடனத்தை ஏளனம் செய்து வைரலான டிக்டாக் வீடியோ தொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சீல் உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு பத்து எம்.பி.யும், மித்ரா தலைவருமான P. பிரபாகரன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் கலாச்சார உணர்வின்மை தொடர்பான ஓர் ஆழமான பிரச்சினையை எடுத்துக் காட்டுகிறது. மேலும் இதுபோன்ற மரியாதைக் குறைவானச் செயல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பது, உறுதிச் செய்யப்பட வேண்டும் என்று பிரபாகரன் வலியுறுத்தினார்.
காவடி நடனம் என்பது தைப்பூசம் போன்ற சமய விழாக்களில் இறைவன் முருகனை வழிபடும் பக்தர்களால் செலுத்தப்படும் நேர்த்திக் கடனாகும்.
இது ஒரு கலாச்சார நடைமுறை மட்டுமல்ல. மாறாக, பக்தி நெறியின் உள்ளார்ந்த தெய்வ அம்சத்தின் ஓர் ஆழமான வெளிப்பாடாகும்.
இதனை இவ்வாறு ஏளனம் செய்து அற்பமாக்குவது, இந்து சமூகத்திற்கு மட்டுமல்ல, நமது நாட்டின் பன்முகக் கலாச்சார கூறுகளை மீறுவதற்கு ஒப்பாகும் என்று பிரபாகரன் சுட்டிக் காட்டினார்.
இந்த ஏளன செயலில் ஈடுபட்ட அறிவிப்பாளர்கள், தங்களின் செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் மன்னிப்பு மட்டும் தீர்வாகாது. மாறாக, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் பாய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சமயம் சார்ந்த விவகாரங்களில் இது போன்ற செயல்கள் ஒரு சிறு தவறு என்று எந்தவொரு மதத்தினரும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
அதேவேளையில் எரா FM இன் பிரதான நிறுவனமான ஆஸ்ட்ரோ, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாது என்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.