முன்னாள் காதலனின் அலுவலகத்திற்கு அத்துமீறி நுழைந்தாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியை ரீத்தா விடுதலை

சிலிம் ரீவர், மார்ச்.04-

தனது முன்னாள் காதலனின் அலுவலகத்திற்குள் ஆத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த ஆசிரியை ரீத்தா நடராஜா, இன்று சிலிம் ரீவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

ரீத்தாவிற்கு எதிரான வழக்கு விசாரணையைத் தொடரப் போவதில்லை என்றும், வழக்கை மீட்டுக்கொள்ளுமாறு ஆசிரியை ரீத்தா சார்பில் செய்து கொள்ளப்பட்ட பிரதிநிதித்துவ மனுவிற்கு, பேரா மாநில பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகம் அனுமதி வழங்கியதாகவும், பிராசிகியூட்டர் தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பிராசிகியூட்டர் தரப்பின் இந்த விண்ணப்பத்தை தொடர்ந்து 42 வயதான ஆசிரியை ரீத்தாவை குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாக மாஜிஸ்திரேட் புல்ராணி கவுர் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி பேரா, முவாலிம் மாவட்டத்திற்கு உட்பட்ட கிளினிக் ஒன்றில் தனது முன்னாள் காதலன் 35 வயது P. நவநீத் என்பவரின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகப் புறப்பாட நடவடிக்கையின் துணை தலைமையாசிரியரான ரீத்தா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி சிலிம் ரீவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 6 மாத சிறை அல்லது மூவாயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 447 பிரிவின் கீழ் ஆசிரியை ரீத்தா குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

எனினும் ஆசிரியை ரீத்தாவிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும், அந்த குற்றச்சாட்டுகள் ஏன் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று ரீத்தாவின் வழக்கறிஞர், பேரா மாநில பப்ளிப் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு மிக விளக்கமாக ஒரு பிரதிநிதித்துவ மனு சமர்ப்பித்து இருந்தார்.

ஏன் இந்த வழக்கு தொடரப்படக்கூடாது, ஏன் இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பதற்கு, புகைப்படங்கள் உட்பட தேவையான ஆதாரங்கள் பேரா மாநில பப்ளிக் பிராசியூட்டர் தலைவருக்கு பிரதிநிதித்துவ மனு மூலம் சமர்ப்பிக்கப்பட்டதாக ரீத்தாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்

வழக்கு விசாரணையை செவிமடுத்த மாஜிஸ்திரேட் புல்ராணி கவுர், ரீத்தாவை வழக்கிலிருந்து விடுவிக்க அனுமதி அளித்தார். அத்துடன் அந்த ஆசிரியைக்கு எதிரான வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டது தொடர்பில் கல்வி அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட இலாகாவிற்கு நீதிமன்றம் கடிதம் வாயிலாக தெரியப்படுத்தும் என்றார்.

ரீத்தாவின் வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டது தொடர்பில் பேரா மாநில பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்த ஆசிரியையின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS