தைப்பூசக் காவடியாட்டத்தை ஏளனப்படுத்துவதா? எரா FM வானொலியின் 3 அறிவிப்பாளர்கள் இடை நீக்கம்

கோலாலம்பூர், மார்ச்.04-

தைப்பூசக் காவடியாட்டத்தை ஏளனப்படுத்தும் வகையில் எரா FM மலாய் வானொலி அலைவரிசை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் பரவலான கண்டனக் கணைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த வானொலியின் மூன்று அறிவிப்பாளர்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை எரா FM வானொலி அலைவரிசையை வழிநடத்தி வரும் பிரதான நிறுவனமான ஆஸ்ட்ரோ ஆடியோ தெரிவித்துள்ளது.

நபில் அஹ்மாட், அஸாட் ஜாஸ்மீன் ஜோன் லுயிஸ் ஜெப்ரி மற்றும் ரடின் அமீர் அஃபெண்டி ஆகிய மூன்று அறிவிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வருவதால் அடுத்த அறிவிப்பு வரும் வரையில், அந்த மூன்று அறிவிப்பாளர்களும் எரா FM வானொலி ஒலிபரப்பிலிருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டுள்ளனர் என்று ஆஸ்ட்ரோ ஆடியோ ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அந்த மூன்று அறிவிப்பாளர்களும் தாங்கள் செய்ததை ஒப்புக் கொண்டு, பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளனர்.

எனினும் ஓர் ஒளிபரப்பு நிறுவனத்தின் பொறுப்பையும், கடமையையும் தாங்கள் உணர்ந்து இருப்பதால், இவ்விவகாரத்தை தாங்கள் கடுமையாகக் கருதுவதாக அந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தைப்பூசத் திருநாளில் முருகன் ஆலயங்களில் வழிபாட்டின் முக்கிய கூறாக விளங்கும் காவடியாட்டத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில் அந்த அறிவிப்பாளர்கள் வேல்… வேல்.. என்று முழக்கமிட்டவாறு ஏளன செயலில் ஈடுபட்டதற்கு இந்துக்கள் பலர் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS