கோலாலம்பூர், மார்ச்.05-
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு முன்புறம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த தாதி ஒருவரைத் தாக்கியதாக நம்பப்படும் ஆடவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 10.38 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் கடந்த மார்ச் முதல் தேதி இரவு 10 மணியளவில் அந்த சந்தேகப் பேர்வழியை போலீசார் கைது செய்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏஎஸ்பி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
பிடிபட்ட நபர், மனோரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து ஒரு கத்தியை போலீசார் மீட்டுள்ளனர். எந்தவொரு அடையாளப் பத்திரமும் இல்லாததால் அவரைப் பற்றிய விவரங்களை அறியமுடியவில்லை. சிகிச்சைக்காக அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சுலிஸ்மி அஃபெண்டி குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நபரின் தாக்குதலுக்கு ஆளான தாதிக்கு தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.