பேருந்து, டிரெய்லர் லோரி மோதல், எட்டு பேர் படுகாயம்

குளுவாங், மார்ச்.05-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிலன் 62 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், குளுவாங் அருகில் இரும்பை ஏற்றி வந்த டிரெயலர் லோரியும் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு வயோதிகர் உட்பட எட்டு பேர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து, 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு ரெங்காம் மற்றும் கூலாய் ஆகிய நிலையங்களிலிருந்து பத்து தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள் விரைந்ததாக சிம்பாங் ரெங்காம் ஒருங்கிணைப்பாளர் மஸ்னான் முகமட் தெரிவித்தார்.

இவ்விபத்தில் காயமுற்ற எட்டு பேரில் நால்வர், பேருந்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.

44 மற்றும் 23 வயதுடைய இரு ஆண்கள், 25 மற்றும் 30 வயதுடைய இரு பெண்கள் ஆகியோரை இடிபாடுகளிலிருந்து மீட்பதற்கு மீட்புப் படையினர் பிரத்தியேகச் சாதனங்களைப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

73 வயது முதியவர் உட்பட இதர நால்வர், இடிபாடுகளில் சிக்கவில்லை என்ற போதிலும் காயமுற்றனர் என்று அவர் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS