கோலாலம்பூர், மார்ச்.05-
தைப்பூச உற்சவத்தின் வேல் வேல் முழக்கத்தை கேலி செய்து நடனமாடிய எரா எஃப்எம் மலாய் வானொலியின் மூன்று அறிவிப்பாளர்கள் உட்பட அறுவர் இன்று புகிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு ஆளாகினர்.
நபில் அஹ்மாட், அஸாட் ஜாஸ்மின் ஜோன் லுயிஸ் ஜெப்ரி, மற்றும் ரடின் அமீர் அஃபெண்டி ஆகிய அந்த மூன்று அறிவிப்பாளர்கள் இன்று காலை 10.30 மணியளவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் கருப்பு நிற Toyota Vellfire வாகனத்தில் வந்திறங்கினர்.
ஆஸ்ட்ட் ஆடியோ நிறுவனத்திற்குச் சொந்தமான ஏரா எஃப்எம் வானொலியின் இதர மூன்று பணியாளர்கள் தனித் தனி வாகனத்தில் வந்தனர். அவர்கள் சம்பவம் நிகழும் போது அந்த காட்சியைப் பார்த்து பரிகாசம் செய்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
அந்த சர்ச்சைக்குரிய காணொளி ,சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்து சமயத்தை இழிவுப்படுத்தும் நடவடிக்கையில் மொத்தம் ஆறு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த அறுவரிடமும் புகிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உயர் மட்ட விசாரணைப் பிரிவான USJT விசாரணை செய்து வருகிறது என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய அந்த காணொளி தொடர்பில் நாடு தழுவிய நிலையில் 44 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் குற்றவியல் சட்டம் 298 ஆவது பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் விளக்கினார்.