சுங்கை சிப்புட்டில் சொக்சோவின் சமூக நலன் உதவித் திட்டப் பதிவு

சுங்கை சிப்புட், மார்ச்.05-

பேரா, சுங்கை சிப்புட்டில் கடந்த மார்ச் முதல் தேதி தொடங்கி இரண்டு தினங்களுக்கு மக்கள் மடானி சமூக நலன் உதவித் திட்டங்களுக்கான பதிவு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்றது.

மஇகா, சுங்கை சிப்புட், ஜாலோங் கிளைத் தலைவர் வின்செண்ட் மற்றும் கோலகங்சார் நகராண்மைக்கழக பணியாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் நடராஜன் தலைமையில் உள்ளூர் வட்டார மக்களுக்கான சமூக நல உதவித் திட்ட பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் கீழ் உள்ள 20 வகையான சமூக உதவித் திட்டங்களை மக்களுக்கு, குறிப்பாக B40 தரப்பினருக்கு பெற்றுத் தருவதற்கான முன்னெடுப்பே இந்த மடானி சமூக நலன் உதவித் திட்டப் பதிவு நடவடிக்கையாகும்.

சுங்கை சிப்புட்டிலிருந்து கோல கங்சாருக்கு செல்ல சிறிது தூரம் என்பதால் இது போன்ற உதவிகளை பெறுதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் சொக்சோவின் ஒத்துழைப்புடன் கடந்த மார்ச் முதல் தேதி தாமான் துன் சம்பந்தன் முதியோர் இயக்கத்தில் இந்த பதிவு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 120 பேர் தங்களைப் பதிவு செய்து கொண்டனர்.

மறுநாள் சுங்கை சிப்புட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த பதிவு நடவடிக்கையில் கிட்டத்தட்ட 180 பேர் தங்களை பதிவு செய்து கொண்டனர். ஆக சொக்சோ ஏற்பாடு செய்து கொடுத்த இந்த இரு இடங்களிலும் கிட்டத்தட்ட 300 பேர் சமூக நல உதவிகளை பெறுவதற்கு தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளரான நடராஜன் விவரித்தார்.

இந்த உதவித் திட்டத்தில் தன்னை பதிவு செய்து கொண்டுள்ள சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த பெரியவர் துரைராஜு விவரிக்கையில், தனக்கு தேவையான சில உதவிகள் குறிப்பாக பொருள் அல்லது பண வடிவில் எதிர்பார்த்து, இந்த உதவிகளுக்கு விண்ணப்பித்து இருப்பதாகக் குறிப்பிட்டார்.

சமூக நல உதவித் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள சுங்கை சிப்புட், கம்போங் செந்தோசாவைச் சேர்ந்த மூதாட்டி சுப்புலெட்சுமி முத்தையா விவரிக்கையில் தம்முடைய கஷ்டங்களுக்கு உதவி கோரி, விண்ணப்பம் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

தங்கள் இயக்கம் ஒற்றுமையாகவும், சிறப்பாகவும் இந்த பதிவு நடவடிக்கையை முன்னெடுத்து இருப்பதாக நடராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளையில் இந்த பதிவு நடவடிக்கைக்கு பெரியளவில் உதவி செய்த மஇகா ஜாலோங் கிளைத் தலைவர் வின்செண்ட்னுக்கும், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரனுக்கும் தங்கள் இயக்கம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக நடராஜன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS