ஷா ஆலாம், மார்ச்.05-
தைப்பூச வேல் வேல் முழக்கத்தைக் கேலி செய்து நடனமாடிய ஏரா எப்ஃஎம் மலாய் வானொலியின் மூன்று அறிவிப்பாளர்கள் உட்பட அறுவர் இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ளனர்.
அந்த அறுவருக்கு எதிரான விசாரணை அறிக்கை விரைவில் சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை என்ற பெயரில் சமயம் சார்ந்த அம்சங்களைக் கேலி செய்ததாகக் கூறப்படும் அந்த மூன்று அறிவிப்பாளர்கள் உட்பட அறுவருக்கு எதிரான விசாரணை அறிக்கைகள் தற்போது முறைப்படுத்தப்பட்டு வருவதாக டான்ஸ்ரீ ரஸாருடின் விளக்கினார்.
அந்த அறுவரும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விட்டதாக இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே புக்கிட் அமான் விசாரணை முடிவடைந்ததும், அந்த மூன்று பிரபல அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்களின் கண்களில் படாமல், தாங்கள் வந்த VellFfire வாகனத்தின் மூலம் சந்தடியின்றி புறப்பட்டுச் சென்று விட்டதாக புக்கிட் அமான் தலைமையகத்திற்கு வெளியே காணப்பட்ட செய்தியாளர்கள் தெரிவித்தனர்.