ஜார்ஜ்டவுன், மார்ச்.06-
ஜார்ஜ்டவுன், புக்கிட் ஜம்பூல், அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் கெலிபார் 22 ரக 700 பயன்படுத்தப்படாத தோட்டாக்களும், 13 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களும் ஒரு பையில் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பராமரிப்புத் தொழிலாளர் ஒருவரை மூன்று நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.
இன்று காலையில் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் சித்தி நூர் சுஹாய்லா பஹாரின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட 46 வயதுடைய பராமரிப்புத் தொழிலாளருக்கு வரும் மார்ச் 8 ஆம் தேதி வரை தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.
கடந்தாண்டில் ஒரு வீட்டில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த தோட்டாக்களைக் கண்டெடுத்ததாக அந்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 1960 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் அந்த நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.