கோலாலம்பூர், மார்ச்.06-
இனத்தையும், மதத்தையும் கேலி, கிண்டல் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் இனம் மற்றும் மதத்தை முன்நிறுத்தி ஆத்திரமூட்டல், அவமதிப்பு, கேலி மற்றும் பதிலடி கொடுப்பது போன்ற செயல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினரையும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இவ்விவகாரம் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை மற்றும் தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி ஆகியவற்றுடன் இணைந்து தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு நடப்பு நிலவரங்களை அணுக்கமாக கண்காணித்து வருவதாக ஆரோன் அகோ டாகாங் தெரிவித்தார்.
அவசியம் ஏற்படும் பட்சத்தில் பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் துறையையும், எம்சிஎம்சி ஆணைத்தையும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு கேட்டுக் கொள்ளும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஆரோன் அகோ டாகாங் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் எப்போதும் சமூக பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை உறுதிச் செய்வதற்கு குற்றவியல் தண்டனை சட்டம் 298, 504, 505 ஆகிய விதிகள் மற்றும் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையச் சட்டம் ஆகியவற்றை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நினைவுறுத்தினார்.