EmpowerHer Digital 2025 திட்டத்தின் வழி மின்னியல் வணிகத்தில் பி40 பெண்களும் சாதிக்கலாம்

கோலாலம்பூர், மார்ச்.06-

மின்னியல் வணிகத்தில் பெண் தொழில்முனைவோர் ஆளுமையை அதிகரிக்க இன்று சிறப்புப் பட்டறை ஒன்று நடைபெற்றது.

ஆண்களுக்கு ஈடாக பெண்களும் இலக்கவியல் வணிகத்தில் முன்னேற, இந்தப் பட்டறையை இலக்கவியல் அமைச்சு ஏற்பாடு செய்ததாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

இலக்கவியல் அமைச்சின் கீழ், மலேசிய இலக்கவியல் வணிக கழகம் மற்றும் தேசிய இலக்கவியல் நிறுவனத்தோடு இணைந்து SMECorp Malaysia- ஆதரவுடன் பி40 பெண்களுக்கு இந்த ஒரு நாள் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் வழி பெண்கள், தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு, இலக்கவியல் உலகில் வணிகத்தை வலுப்படுத்திக் கொள்ள இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

வணிகத்துக்கும் தொழிட்நுட்பத்துக்குமான இடைவெளியைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பட்டறை அமைந்தது. இந்தப் பட்டறையில் கலந்துரையாடல், துறைசார் வணிகத்தின் அனுபவப் பகிர்வு, வணிக உத்தி, கண்காட்சி, வியாபாரச் சந்தையை அணுகும் முறை என வணிகத்துக்குத் தேவையான முக்கிய அங்கங்கள் இடம் பெற்றன.

இதில் முக்கிய வணிக நிறுவனங்கள் Shopee, TikTok, CGC டிஜிட்டல் மற்றும் Pixlr ஆகியன இந்தப் பட்டறையில் பங்கு கொண்ட பெண்களுக்கு வழிகாட்டின.

இது போன்ற பட்டறைகளையும், இலக்கவியல் வணிக பயிற்சிகளையும் பிற மாநிலங்களில் நடத்த வேண்டிய அவசியத்தைத் தாம் உணர்ந்திருப்பதாகவும், இதன் வழி பெண்கள், குறிப்பாக கிராமப் புறங்களில் வணிகம் செய்யும் பெண்களும் இதன் வழி பயனடைய இயலும் என தாம் நம்புவதாகவும் கோபிந்த் சிங் தமது உரையில் கூறினார்.

பி40யைச் சேர்ந்த பெண்களும் அசுர வளர்ச்சி காணும் இலக்கவியல் வணிகத்தில் தங்களது ஆற்றலை வளர்த்துக் கொண்டு மேலும் முன்னேற வேண்டும் என கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS