பெட்டாலிங் ஜெயா, மார்ச்.06-
தைப்பூசக் காவடியாட்டத்தைக் கொச்சைப்படுத்தி காணொளி ஒன்று வெளியிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏரா எம்ஃஎம் வானொலியின் உரிமத்தை இடை நீக்கம் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பது ஒரு கடுமையான நடவடிக்கையாகும் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
இந்த குற்றத்தை அந்த வானொலியைச் சேர்ந்த மூவர் மட்டுமே புரிந்துள்ளனரே தவிர அந்த வானொலி நிலையத்தின் அனைத்து பணியாளர்களும் அல்ல என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.
இந்து மதத்தை அவமதித்தற்காக அந்த வானொலி நிலையம், பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் சர்ச்சைக்குரிய காணொலியில் சம்பந்தப்பட்டுள்ள மூன்று அறிவிப்பார்களையும், இதர இரண்டு பணியாளர்களையும் இடை நீக்கம் செய்துள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பட்டார்.
பிற மதத்தை அவமதித்தது மற்றும் உரிமத்தின் விதிமுறைகளை மீறியது ஆகிய குற்றங்களுக்கான ஏரா எப்ஃஎம் வானொலியின் உரிமத்தை இடை நீக்கம் செய்யும் நோக்கத்திலான காரணம் கோரும் கடிதம் ஒன்றை அந்த தனியார் வானொலி நிலையத்தை வழிநடத்தி வரும் ஆஸ்ட்ரோ ரேடியோ சென் பெர்ஹாட் நிறுவனத்திற்கு மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி நேற்று அனுப்பியுள்ளது.