பெட்டாலிங் ஜெயா, மார்ச்.06-
சர்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி விநோத் காளிமுத்து, சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், போலீஸ் துறையை கேட்டுக் கொண்டார்.
தைப்பூச விழாவில் வேல், வேல் என்று கூறி, குடிப்போதையில் அல்லது ஆட்கொள்ளப்பட்டவர்களைப் போல் கூச்சலிட்டு இந்துக்கள் ஆடுகின்றனர் என்று மிக இழிவாக ஒப்பீடு செய்து பேசியிருக்கும் ஜம்ரிக்கு எதிராக சொஸ்மா சட்டம் பாய வேண்டும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தியுள்ளார்.
தம்முடைய இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் இந்திய இளைஞர்கள் சிலர், அந்த சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை டத்தோஸ்ரீ சரவணன் உதாரணம் காட்டினார்.
சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் புரிந்துள்ளனர் என்று போலீஸ் துறைக்கு தெரிந்திருந்தாலும், அவர்கள் புரிந்துள்ள குற்றத்திற்கான ஆதாரங்களை திரட்ட முடியாத நிலையிலும் சம்பந்தப்பட்டவர்கள் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க முடிகிறது.
ஆனால், ஜம்ரி போன்ற நபர்கள், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, பொது அமைதிக்கு பாதிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு சவால் விடுகிறார்கள் .
அவர்களின் இந்த செயலுக்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. எனவே அத்தகைய நபர்களை சொஸ்மாவின் கீழ் தடுத்து வைப்பதில் ஆதாரங்கள் இல்லை என்று நாம் மெத்தனமாக இருந்து விட முடியாது என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.