ஜார்ஜ்டவுன், மார்ச்.07-
பினாங்கு, ஜாரஜ்டவுனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாது ஒருவரை ஆடை களையச் செய்து, வக்கிரச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் அரசாங்க மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மார்ச் 4 ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க மாது ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற போலீஸ் புகாரின் அடிப்படையில் இவ்விவகாரத்தை புலன் விசாரணை செய்து வந்த போலீசார், 43 வயதுடைய அந்த மருத்துவரை நேற்று கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மருத்துவர் இன்று காலையில் மாஜிஸ்திரேட் நட்ராதுன் முகமட் சைடி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக வரும் மார்ச் 10 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.
கைகால் நகங்களைச் சீர்படுத்தும் ஒப்பனைப் பணியாளரான அந்த மாதுவை, பரிசோதனை என்ற பெயரில், உதவிக்கு பெண் தாதியர் யாரையும் அனுமதிக்காமல் தனது அறையில் ஆபாசச் சேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.