பெட்டாலிங் ஜெயா, மார்ச்.07-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மால் கைது செய்யப்பட்டு, நான்கு நாள் தடுத்து வைக்கப்பட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்ட மலேசிய கினி நிருபர் B. நந்தகுமார், மனம் திறந்துள்ளார்.
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் ஏஜெண்டிடமிருந்து ஒரு போதும் லஞ்சப் பணம் கேட்டதில்லை என்றும் வெளிநாட்டு தொழிலாளர்களைக் கடத்தும் கும்பல்களை அம்பலப்படுத்தும் தனது செய்தியின் மூலம் லாபம் ஈட்ட முனைந்ததில்லை என்றும் நந்தகுமார் விளக்கியுள்ளார்.
நந்தகுமார் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டது தொடர்பில் பேசிய எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி, ஒரு வெளிநாட்டு தொழிலாளர் முகவரிடம் நந்தகுமார் ஒரு லட்சம் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் 20 ஆயிரம் ரிங்கிட் வரை பேரம் பேசப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை நந்தகுமார் வன்மையாக மறுத்தார். அந்நியத் தொழிலாளர்களைக் கடத்தும் கும்பல் தொடர்பில் மலேசிய கினியில் தாம் எழுதிய செய்தியைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஏஜெண்டு ஒருவர் தம்மை தொடர்புகொண்டு, அந்நியத் தொழிலாளர்களைக் கடத்தும் அந்த கும்பலில் தாம் சம்பந்தப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
அதன் பின்னர் இரண்டு பாகிஸ்தான் ஏஜெண்டுகளைத் தாம் சந்தித்ததாகவும், தமக்கு 50 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாகவும், அதனைத் தாம் நிராகரித்து விட்டதாகவும் நந்தகுமார் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் தாம் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநரை உடனடியாக சந்தித்து இது குறித்து விவாதித்தாகவும், ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
எனினும் அந்த ஏஜெண்டை மீண்டும் ஒருமுறை சந்திப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்து ஆதாரங்களைத் திரட்டுமாறு அந்த இயக்குநர் தம்மை கேட்டுக் கொண்டதாக நந்தகுமார் குறிப்பிட்டார்.
அதே வேளையில் ஒரு ஏஜெண்டைப் போல தாம் மாறு வேடத்தில் வருவதாக அந்த இயக்குநர் வாக்குறுதி அளித்து இருந்தார்.
அதன்படியே தாம் அந்த ஹோட்டலுக்குச் சென்றதாகவும், இதனை மலேசிய கினி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவில்லை என்றும் நந்தகுமார் குறிப்பிட்டார்.
அவ்வாறு தெரிவித்தால், அங்கே செல்வது இடர்மிக்கது என்று கூறி தம்மை தடுத்து இருப்பார்கள் என்ற அச்சம் தமக்கு மேலோங்கியிருந்ததாக நந்தகுமார் விளக்கினார்.
அதேவேளையில் அங்கே உண்மையிலேயே என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களை நந்தகுமார், தாம் பணியாற்றி வந்த மலேசிய கினி அகப்பக்கத்தில் விரிவாக இன்று விளக்கியுள்ளார்.
இதனிடைய நந்தகுமார் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பில் சுயேட்சை விசாரணைக் குழுவை மலேசிய கினி அமைத்துள்ளது.
அந்த விசாரணையின் முடிவு தெரியும் வரையில் மலேசிய கினி, முழு அனுகூலத்துடன் நந்தகுமாரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.