கோலாலம்பூர், மார்ச்.07-
தைப்பூசக் காவடியாட்டத்தையும், இந்துக்களையும் சிறுமைப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவேற்றத்தைச் செய்துள்ள ஜம்ரி வினோத் காளிமுத்துவிற்கு எதிராக போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்துக்களையும், இந்து மதத்தையும் நிந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள ஜம்ரி வினோத், ஆகக் கடைசியாக தைப்பூசக் காவடி தொடர்பில் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து பதிவேற்றத்தை அகற்றும்படி வலியுறுத்தப்பட்டது.
தற்போது 48 மணி நேரம் கடந்து விட்டது. இன்னமும் அந்த சர்ச்சைக்குரிய சமயப் போதகரின் கருத்து பதிவேற்றம் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது.
இந்துக்களை அவமதிக்கும் மிக உணர்ச்சிகரமான சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ள ஜம்ரி வினோத்தின் அந்த உள்ளடக்கம், மேலும் பலர் பார்ப்பதற்கும், பகிர்வதற்கும் சாத்தியம் இருப்பதாக RSN ராயர், இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இனம் மற்றும் மத சீண்டல்கள் தொடர்புடைய பதிவேற்றங்கள் சமூக வலைத்தளங்களிலிருந்து உடனடியாக அகற்றப்படும் என்று முழக்கமிடும் போலீஸ் துறையும், மலேசிய தொடர்புடைய பல்லூடக ஆணையமும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே பார்த்துக் கொண்டு இருப்பது ஏன் என்று டிஏபியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராயர் கேள்வி எழுப்பினார்.