பெட்டாலிங் ஜெயா, மார்ச்.08-
50 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறி, கைது செய்யப்பட்டுள்ள தனது இரண்டு முன்னாள் உதவியாளர்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று செபூத்தோ எம்.பி. திரேசா கொக் அறிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுவதற்கு தாம் உறுதிப் பூண்டுள்ளதாக டிஏபி உதவித் தலைவருமான திரேசா கொக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் எனது தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் வாங்குவதற்காக 16 பள்ளிகளுக்கு தலா 99 ஆயிரம் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேச அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு என்னிடம் தெரிவித்தது.
ஆனால், , இவ்வளவு பெரியத் தொகையை தாம் அங்கீகரிக்கவே இல்லை என்றும், இது தொடர்பாக ஆராயப்பட்டதில் சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்கப்பட்டுள்ளதைப் போல நிறுவனம் வெளியிட்டுள்ள விலை பட்டியல் சீட்டு போலியானது என்பது தெரியவந்துள்ளது என்று திரேசா கொக் தெரிவித்துள்ளார்.
மூன்று ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் மூன்று ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் மொத்த விலையே 55 ஆயிரத்து 299 ரிங்கிட் என்று எல்ஜி பிராண்ட் நிறுவனத்தினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். அப்படியிருக்கும் போது ஒவ்வொரு பள்ளிக்கும் 99 ஆயிரம் ரிங்கிட் யாரால் அங்கீகரிக்கப்பட்டது என்று திரேசா கொக் கேள்வி எழுப்பினார்.