ஜார்ஜ்டவுன், மார்ச்.08-
பெண் நோயாளி ஒருவரை, ஆடை களையச் செய்து, வக்கிர செயலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பினாங்கைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு எதிராக மற்றொரு போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதே மருத்துவர், தம்மையும் நிர்வாணப்படுத்தி, கைப்பேசியில் படம் எடுத்ததாக மாது ஒருவர், 43 வயது மருத்துவருக்கு எதிராக நேற்று போலீஸ் புகார் அளித்து இருப்பதாக பினாங்கு, தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் லீ சுவீ சாகே தெரிவித்தார்.
இத்துடன் அந்த மருத்துவருக்கு எதிராக இதுவரையில் 3 புகார்களை போலீசார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று புகார் அளித்துள்ள மாது, கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி இரவு 9.15 மணியளவில் அந்த மருத்துவர் பணியாற்றும் மருத்துவமனையில் பாலியல் சேட்டைக்கு ஆளாகியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரத்த பரிசோதனை அறிக்கையை எடுத்து வரும்படி தம்மைப் பணிப்பதற்கு முன்னதாக தமக்கு இருதய நோய் இருப்பதாகவும், ஆடை களையச் செய்து சோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாக அந்த மாது தெரிவித்துள்ளார்.
அந்த மருத்துவர் கூறியப்படியே தாம் ஆடை களைந்து நின்று போது, மருத்துவர் தனது கைப்பேசியில் தம்மை நிர்வாண கோலத்தில் படம் எடுத்ததாக அந்த மாது புகார் தெரிவித்துள்ளார் என்று லீ சுவீ சாகே குறிப்பிட்டார்.
அந்த மருத்துவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசியைச் சோதனையிட்ட போது, அந்தப் பெண் நிர்வாணப்படுத்தப்பட்ட படம், அதில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவங்களைத் தவிர்த்து மேலும் சில பெண் நோயாளிகளிடம் அந்த மருத்துவர் வக்கிர செயலில் ஈடுபட்டதை அந்த மருத்துவர் ஒப்புக் கொண்டு இருப்பதையும் லீ சுவீ சாகே தெளிவுபடுத்தினார்.