ஈப்போ, மார்ச்.08-
தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் ஆயர் கூனிங் இடைத் தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தாலும், மாநில சட்டமன்றக் கூட்டத் தொடருக்கான தேதிகளில் மாற்றம் செய்யும் எண்ணமில்லை. அக்கூட்டம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என பேரா மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சராணி முகமட் தெரிவித்திருக்கிறார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் இயந்திரம் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும். எனவே இடைத் தேர்தல், மாநில சட்டமன்றக் கூட்டத்தைச் சீர்குலைக்காது என்றே தாம் கருதுவதாக அவர் விளக்கினார்.
ஆயர் கூனிங் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும். முன்கூட்டிய வாக்களிப்பு ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்தப்படும் என எஸ்பிஆர் அண்மையில் அறிவித்திருந்தது. கடந்த மாதம் 22 ஆம் தேதி ஆயர் கூனிங் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த இஷ்சாம் ஷாருடின் மாரடைப்பால் காலமானதை அடுத்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.