பிரதமருக்கு எதிராக அவதூறு – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் போலீஸ் விசாரணை

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.08-

177 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்க கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு எதிாக எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் விசாரணையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை தொடர்புபடுத்தி அவதூறான தகவலை டிக் டோக்கில் பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இஸ்மாயில் சப்ரியிடம் நடத்தப்படும் லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணையில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலையும் தொடர்பு படுத்தி அவதூறு விளைவித்துள்ளதாக கூறப்படுகிறது என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதை ஐஜிபி குறிப்பிடவில்லை. ஆனால், அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக முழு வீச்சில் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த டிக் டோக் கணக்குக்கு உரியவர் யார் என்பதை அடையாளம் காணும்படி மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தைத் தாங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக ஐஜிபி தெரிவித்தார்.

தமக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று நோக்கிலேயே இஸ்மாயில் சப்ரியை மிரட்டும் வகையில் எஸ்பிஆர்எம் விசாரணையை டத்தோஸ்ரீ அன்வார் முடுக்கியிருப்பதைப் போல அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அந்த காணொளியில் பேசியிருப்பதாக அறியப்படுகிறது.

அந்த நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பது துல்லியமாக அடையாளம் காணப்படவில்லை. ஆனால், அந்த முன்னாள் எம்.பி, பிகேஆர் கட்சி சார்பில் கடந்த 2008 ஆம் ஆண்டில் கெடா, பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற N. கோபாலகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது.

இஸ்மாயில் சப்ரியின் எஸ்பிஆர்எம் விசாரணையுடன் தொடர்புபடுத்தி, பிரதமர் அன்வார் மற்றும் அமைச்சர் சைபுடினுக்கு எதிராக கோபாலகிருஷ்ணன் வெளியிட்ட காணொளி ஒன்று, அண்மையில் சமுக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS