’கேளடி கண்மணி’ திரைப்படத்திற்குத் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிறப்பிடம் உண்டு. ராதிகாவுடன் எஸ்.பி.பி நடித்திருந்த அப்படத்தில், அவர் கடற்கரையில் மூச்சடக்கிப் பாடும் பாடல் பலரைக் கவர்ந்த ஒன்று. ரசிகர்கள் மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்டு ஆச்சரியத்தில் திளைத்தார்கள்.
எஸ்.பி.பி-யால் மட்டுமே இப்படியெல்லாம் பாட முடியுமென்று ஒரு கோஷ்டி கொடி பிடித்தது. இன்றைக்கும் அந்தப் பாட்டை கேட்டாலே ஆனந்தம் பெருகும். இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோரின் மூத்த சகோதரரான பாவலர் வரதராஜனால் எழுதப்பட்ட அந்தப் பாடல் பதிவு நடைபெறும் சமயம், படத்தின் இசையமைப்பாளராகிய இசைஞானி அவசரமாக வெளியே செல்ல வேண்டி இருந்ததால், தம்பி கங்கை அமரனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றாராம்.
கடற்கரை மணலில் நடந்தபடி, எஸ்பி. பாலா மூச்சை இழுத்து அடக்கிப் பாடுவதாக நமக்குக் காட்டினார்கள். பாடி விட்டு மூச்சு வாங்குவார் எஸ்.பி.பி. மேலும் சில வரிகளையும் அது போலப் பாடியிருப்பார்.
உண்மையில் ரெகார்டிங்கில் சில புதுமைகளைப் புகுத்தியே அவ்வாறு செய்ததாகவும், மூச்சையடக்கியெல்லாம் பாடவில்லை என்றும், பின்னாளில் இதனை பாலுவே அறிவித்துள்ளதாகவும் தற்போது ஒரு நிகழ்ச்சியில் பாலு சாரின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கை அமரனும், பாடல் பதிவின் போது அவரும் பாலுவுமே இருந்ததாகவும், இந்த நுணுக்கத்தையெல்லாம் பாலுதான் செய்தார் என்றும் கூறியுள்ளார்.