பெட்டாலிங் ஜெயா, மார்ச்.09-
கோலாலம்பூரில் உள்ள மலாயான் மன்ஷன் கட்டடத்திற்கு அருகில் உள்ள கிள்ளான் ஆற்றில் ஒரு முதலைக் காணப்பட்டது. மூன்றாவது முறையாக அந்த முதலைக் காணப்படுவதாக நம்பப்படுகிறது. நேற்று இரவு 10.19 மணிக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு பொதுப் பாதுகாப்புப் படை விரைந்ததாக அதன் கோலாலம்பூர் பகுதி அதிகாரி மேஜர் அஹ்மாட் ஜுனைடி டுகுட் சோஹார்தோ குறிப்பிட்டார்.
மலேசியக் காவல் துறை, பெர்ஹிலிதான் எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்காக்கள் துறை ஆகியவற்றின் உதவியுடன் அந்த முதலையைப் பிடிக்க ஆயத்தமாக இருந்தாலும், அது பின்னர் காணப்படவில்லை என்று அவர் கூறினார்.
மோசமான வானிலை, கடுமையான நதி நீரோட்டம் காரணமாக முதலையைப் பிடிக்க நேரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை நின்றாலும், மின்னல் தாக்கும் அபாயம் இருந்தது. பொது மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்கவும், இதே போன்ற காட்சிகள் கண்டறியப்பட்டால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.