குவாந்தான், மார்ச்.09-
குவாந்தான் யூடிசி மையத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் சேவையை மேம்படுத்த வேண்டும் என்று நாட்டின் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ ஷாம்சூல் அஸ்ரி அபு பாகார் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, சாலை போக்குவரத்துத் துறை ஜேபிஜே, தேசிய பதிவுத் துறை ஜேபிஎன், குடிநுழைவுத் துறை ஆகியவற்றில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அவர் மேற்கொண்ட திடீர் வருகையின்போது, ஜேபிஜே அலுவலகத்தில் சாலை வரி புதுப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கூடுதல் இருக்கைகளும் சேவை மையங்களும் தேவைப்படுவதைக் கண்டறிந்தார். மேலும், கிளந்தான், திரங்கானு போன்ற மாநிலங்களில் இருந்து மக்கள் குவாந்தான் யூடிசி மையத்திற்கு வருவதால், அங்கு கூடுதல் வசதிகள் தேவை என்பதைச் சுட்டிக் காட்டினார். மக்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.