பெக்கான், மார்ச்.09-
அரசு ஊழியர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும் என்று நாட்டின் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பாகார் வலியுறுத்தியுள்ளார். சமூக அந்தஸ்தை நிலைநிறுத்த நினைப்பதால், பல அரசு ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி திவாலாகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க பணத்தை நிர்வகிக்கும் திறன் பெற்ற அரசு ஊழியர்கள் கூட தங்கள் சொந்தப் பணத்தை நிர்வகிக்க முடியாமல் கடன் வாங்குகிறார்கள். Xiaomi திறன்பேசி வாங்கிப் பயன்படுத்தும் நிலையில் இருப்பவர்கள், ஐபோன் வாங்க முயற்சி செய்யக்கூடாது. பெரோடுவா மைவி கார் வாங்க முடிந்தால், டொயோட்டா வியோஸ் போன்ற ஆடம்பரக் காரை வாங்க முயற்சி செய்யக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் விதிமுறைகளில் நடத்தை ஒழுங்குமுறை விதிகளின்படி, மாத வருமானத்தில் 40 சதவீதத்திற்கு அதிகமாக கடன் வாங்கக்கூடாது. இந்த விதியைப் பின்பற்றினால் திவாலாகும் அபாயத்தைக் குறைக்கலாம். நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு கடன் ஆலோசனை , மேலாண்மை நிறுவனமான ஏகேபிகே மூலம் ஆலோசனை வழங்க வேண்டும் என்று அனைத்து துறை தலைவர்களுக்கும் ஷம்சூல் அஸ்ரி அறிவுறுத்தினார்.
இளைஞர்கள் ஆடம்பர வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதால், நிதிச் சிக்கலில் சிக்கி திவாலாகிறார்கள் என்று மலேசிய திவால் துறை இயக்குநர் டத்தோ எம் பக்ரி அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார். எனவே, இளம் ஊழியர்கள் கடன் பற்று அட்டையை வைத்திருப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.