புத்ராஜெயா, மார்ச்.13-
கிள்ளான் பள்ளத்தாக்கில் தனது முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும், 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகளும், இன்னும் சில விலை உயர்ந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் ஆஜராகினார்.
தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி,இரண்டு முறை எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராகத் தவறிய இஸ்மாயில் சப்ரி, நேற்று மார்ச் 12 ஆம் தேதியுடன் மருத்துவ விடுப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினார்.
காலை 9.46 மணியளவில் இஸ்மாயில் சப்ரியின் கார், புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் நுழைந்தது.
பிரதான நுழைவாயிலில், தனது கார் கண்ணாடியை இறக்கி, அவ்விடத்தில் குழுமியிருந்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களை நோக்கி, இஸ்மாயில் சப்ரி கையசைத்தார்.
இஸ்மாயில் சப்ரியிடம், கடந்த மார்ச் 7 ஆம் தேதி, வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியிருந்தது. எனினும் அவரின் உடல் நிலை காரணமாக விசாரணையை எஸ்பிஆர்எம் ஒத்திவைத்தது.
மொத்தம் 177 மில்லியன் ரிங்கிட், பணமாகவும், பொருளாகவும் கைப்பற்றப்பட்ட இஸ்மாயில் சப்ரி சம்பந்தப்பட்ட இந்த விசாரணையில் அவர் ஒரு சாட்சி அல்ல. மாறாக, சந்தேக நபராக எஸ்பிஆர்எம் வகைப்படுத்தியுள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக 93 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 13 வங்கிக் கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளது.