கோலாலம்பூர், மார்ச்.13-
கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் மாசிமகம் உபயத்தாரின் மாசிமகத் திருவிழா மற்றும் இரத ஊர்வலம், நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது.
மாலை 5.00 மணிக்கு பத்துமலை திருத்தலத்தில், சுவாமி மண்டபத்தில் ஸ்ரீ கணேசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ வரதராஜுப் பெருமாள் எழுந்தருளி, மாலை மணி 6.00 க்கு சிறப்பு பூஜைகளுடன் மங்கள வாத்தியங்களுடன் பத்துமலைத் திருத்தலத்தில் இருந்து புறப்பட்ட ரதம், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலை சென்றடைந்தது.
ரத ஊர்வலத்தில் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ என் சிவகுமார் உட்பட உபய பிரதிநிதிகள் மற்றும் தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக, பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவரும், மாசிமக உபய நாட்டாண்மையும், அறங்காவலருமான டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் மற்றும் உபய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ கணேசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ வரதராஜுப் பெருமாள் எழுந்தருளிய ரதம், பத்துமலைத் திருத்தலத்திலிருந்து, Jalan MRR2, Jalan Sri Batu Caves, ஜாலான் செந்தூல் பாசா வழியாக பக்த பெருமக்களுக்கு அருள்பாலித்த வண்ணம் 12 சாலைகள் வாயிலாக தாய் கோவிலை சென்றடைந்தது.