புத்ராஜெயா, மார்ச்.13-
தனது முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும், 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகளும், இன்னும் சில விலை உயர்ந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு உட்பட்ட இஸ்மாயில் சப்ரி, பிற்பகல் 3 மணிக்கு விடுவிக்கப்பட்டார். அவரின் கார் பிற்பகல் 3.15 மணியளவில் எஸ்பிஆர்எம் தலைமை அலுவலகக் கட்டத்திலிருந்து வெளியேறிறது.
காலையில் எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு நுழையும் போது, தனது காரின் கண்ணாடியை இறக்கி செய்தியாளர்களை நோக்கி மிக உற்சாகமாகக் கையசைத்த இஸ்மாயில் சப்ரி, புறப்படும் போது, எந்தவொரு சமிக்ஞையையும் காட்டவில்லை.
65 வயதான இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான விசாரணை நாளை வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது. எனினும் இந்த விசாரணை இன்னும் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இஸ்மாயில் சப்ரியின் உடல் நிலையைப் பொறுத்து, அவரின் விசாரணை நாட்கள் முடிவு செய்யப்படும் என்று எஸ்பிஆர்எம் வட்டாரம் தெரிவித்துள்ளது.