மலேசிய பிறப்புப் சான்றிதழைப் பெறுவதற்குப் போலி ஆவணங்களைத் தயாரித்து வந்த கும்பல் முறியடிப்பு – செல்லத்தக்க 80 பிறப்பு சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு

புத்ராஜெயா, மார்ச்.13

கடந்த மூன்று ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் போலி ஆவணங்களைத் தயாரித்து, மலேசிய பிறப்புச் சான்றிதழ்களைப் பெறும் சட்டவிரோதக் கும்பல் ஒன்றின் நடவடிக்கையை தேசிய பதிவு இலாவான ஜேபிஎன் வெற்றிகரமான முறியடித்துள்ளது.

ஓப்ஸ் தும்பாங் என்ற பெயரில் கடந்த மார்ச 11 ஆம் தேதி பல்வேறு இடங்களில் தேசிய பதிவு இலாகா மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று தெரிவித்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்முடன் இணைந்து புத்ராஜெயா, சிலாங்கூர், பேராக் மற்றும் பினாங்கு ஆகிய நான்கு மாநிலங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட உளவு நடவடிக்கையின் பலனாக இந்த அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சைபுஃடின் விளக்கினார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் இந்த கும்பல், சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு, இயங்கி வரும் தனியார் சுகாதார கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளின் வசதிகளைப் பயன்படுத்தி, அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டதைப் போன்று வடிவமைக்கப்பட்ட போலியான பிறப்புச் சான்றிதழ் ஆவணங்களைப் பெற்று, தங்கள் மோசடி வேலைகளுக்குப் பயன்படுத்தி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சைபுஃடின் தெரிவித்தார்.

இந்த கும்பலில் ஏஜெண்டுகளுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் இடையில் இடைத்தரகராக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 55 வயது வழக்கறிஞர் உட்பட மூளையாக இருந்து செயல்பட்ட நான்கு நபர்கள் என மொத்தம் 10 உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு பேர் ஆண்கள், இருவர் பெண்கள் என்று அமைச்சர் சைபுஃடின் தெளிவுபடுத்தினார்.

தவிர, பிறப்புகள் தொடர்பாக தகவல் அளித்த மேலும் அறுவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சைபுஃடின் தெரிவித்தார்.

இந்த பத்து பேர் கைது செய்யப்பட்டது மூலம் இந்த சட்ட விரோத நடவடிக்கையின் வாயிலாக ஈட்டப்பட்டது என்று நம்பப்படும் 54 ஆயிரம் ரிங்கிட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நேற்று வரை, சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களில் உள்ள ஆறு பதிவு செய்யப்பட்ட தனியார் கிளினிக்குகள் அல்லது மருத்துவமனைகள் மூலம் தயாரித்து கொடுக்கப்பட்ட போலி ஆவணங்கள் வாயிலாக பெறப்பட்ட செல்லத்தக்க 80 பிறப்புச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சைபுடின் தெரிவித்தார்.

குழந்தை பிறந்த 60 நாட்களுக்கும் மேல் கழித்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் அக்குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்வதற்கு போலி பத்திரங்கள் பயன்படுத்தப்பட்டது தேசிய பதிவு இலாகா அலுவலகங்களில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய பதிவு இலாகாவிலிருந்து செல்லத்தக்க பிறப்பு சான்றிதழ் பெறப்பட்டதும், அது மலேசிய அடையாள கார்டு மற்றும் குடியுரிமை இல்லாத குழந்தைகளின் பெற்றோருக்கு அல்லது பாதுகாவலர்களுக்குக் கறுப்புச் சந்தையில் விற்கப்படுவது தெரியவந்துள்ளது.

இந்த கும்பல் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் மிகப் பெரிய நெட்வொர்க் கட்டமைப்பைக் கொண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று சைபுஃடின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS