பெட்டாலிங் ஜெயா, மார்ச்.13-
அரசியல் கட்சிகளில் மகளிர் பிரிவு முற்றாக துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ள மனித உரிமைப் போராட்டவாதி அம்பிகா ஸ்ரீனிவாசனை பிகேஆர் கட்சியின் மகளிர் துணைத் தலைவி சங்கீதா ஜெயக்குமார் குறை கூறினார்.
அம்பிகாவின் இந்த யோசனை, அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்களிலிருந்து பிரிக்கப்படுகிறது என்று சங்கீதா குறிப்பிட்டார்.
மலேசியா போன்ற ஒரு நாட்டில் ஆழமாக வேரூன்றிய சமூக விதிமுறைகள், இன்னமும் பெண்கள் மீதான விகிதாச்சாரமற்ற சுமைகளைத் தந்து கொண்டு இருக்கின்றன.
ஆண்களுக்கு நிகராக சமத்துவ முறையைக் கொண்ட ஒரு கட்டமைப்பு இல்லாத வரையில் அரசியல் கட்சிகளில் பெண்கள் தங்கள் உரிமைகளை முன்னெடுப்பதற்கும், போராடுவதற்கும் மகளிர் பிரிவின் வாயிலாக மட்டுமே முடியும் என்று சங்கீதா வலியுறுத்தினார்.