புத்ராஜெயா, மார்ச்.13-
உள்ளூர் பிரஜைகளுக்கு குலோன் செய்யப்பட்ட போலி மைகாட் அட்டைகள் தலா 4 ஆயிரம் ரிங்கிட் முதல் 5 ரிங்கிட் வரை விற்பனை செய்யப்பட்டு வந்ததை தேசிய பதிவு இலாகா கண்டு பிடித்துள்ளது.
உள்ளுர் வாசி ஒருவர், அந்த போலி மைகாட் அட்டையைப் பயன்படுத்தி, கடந்த மார்ச் 7 ஆம் தேதி விவேகக் கைப்பேசியை வாங்க முற்பட்ட போது பிடிபட்டார்.
அந்த நபர், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்ட போது, போலியான மைகாட் அட்டையை தயாரிப்பதற்கு மூளையாக செயல்பட்டு வந்த நபர் அடையாளம் காணப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் தேசிய பதிவு இலாகாவின் அதிகாரிகள், சிலாங்கூர், அம்பாங், பாண்டான் இண்டாவில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போது மைகாட் அட்டையைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சைபுஃடின் இவ்விவரத்தைத் தெரிவித்தார்.