தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அருண் துரைசாமி மீது விசாரணை – ஜஜிபி தகவல்

கோலாலம்பூர், மார்ச்.13-

சமய அவமதிப்பு தொடர்பில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படும் சமூக ஆர்வலர் அருண் துரைசாமி, தற்போது தேச நிந்தனைச் சட்டமான 3 R பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹூசேன் அறிவித்துள்ளார்.

WhatsApp-பில் அருண் துரைசாமி பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படும் காணொளி தொடர்பில், பினாங்கு, பத்து காவானில் நேற்று செய்து கொள்ளப்பட்ட போலீஸ் புகார் ஒன்றின் அடிப்படையில் அவருக்கு எதிராக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

இனம், சமயம் மற்றும் அரச பரிபாலனம் சம்பந்தப்பட்ட 3R விவகாரத்தைத் தொட்டது மட்டுமின்றி, போலீஸ் படை மற்றும் பிரதமரைத் தொடர்புப்படுத்தி அருண் துரைசாமி பேசியிருப்பதாக டான்ஸ்ரீ ரஸாருடின் மேலும் கூறினார்.

இந்து மதத்தை அவமதித்துள்ள சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத் காளிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தாமும், தமது தலைமையிலான மலேசிய இந்து ஆகம அணி மற்றும் நாட்டில் உள்ள இந்துக்கள் வீதிப் போராடத்தை முன்னெடுக்கப் போவதாக மக்களை அச்சுறுத்தும் வகையில் அருண் துரைசாமியின் அறிக்கை அமைந்திருப்பதாக ஐஜிபி சுட்டிக் காட்டினார்.

அருண் துரைசாமியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர், தற்போது தேச நிந்தனைச் சட்டத்தின் குற்றவியல் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக டான்ஶ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS