பாலிக் பூலாவ், மார்ச்.14-
பினாங்கு, பாயான் லெப்பாஸ் விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் நண்பரின் பயணப் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக விளையாட்டுக்காக கூறி, குறும்புத்தனம் புரிந்த முதியவர் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 100 ரிங்கிட் அபராதம் விதித்தது.
64 வயது ங் கொக் யோவ் என்ற அந்த முதியவர், பாலிக் பூலாவ் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சியா ஹுவே திங் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 11 ஆம் தேதி புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் பாயான் லெப்பாஸ் அனைத்துலக விமான நிலையத்தல் 44 ஆவது முகப்பிடத்தில் தனது நண்பருடன் சீனாவிற்கு புறப்படத் தயாரான போது, அந்த முதியவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு எதிரான குற்றத்தை அந்த நபர் ஒப்புக் கொண்டார். சம்பவம் நிகழ்ந்த அன்று சீனாவிற்கு புறப்படும் உற்சாகத்தில் தன்னுடன் சீனாவிற்கு பயணம் செய்யும் நண்பரின் பயணப் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக முகப்பிட பணியாளரிடம் அந்த முதியவர் கூறியது அவருக்கே வினையானது.
அந்த முதியவரின் குறும்புத்தனத்தால் அவரும், அவரின் நண்பரும் சீனாவிற்குச் செல்ல அனுதிக்கப்படவில்லை. மாறாக, இருவரும் கைது செய்யப்பட்டு, போலீஸ் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.