பெட்டாலிங் ஜெயா, மார்ச்.14-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கொக்கின் முன்னாள் உதவியாளர், 5 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாகக் கேட்டுப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
தடுப்புக் காவலுக்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்பிஆர்எம் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட எட்மண்ட் தியோ என்ற முன்னாள் உதவியாளருக்கு எதிராக இன்னும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டு கொண்டு வரப்படவில்லை.
தனக்கு எதிராக கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் வன்மையாக மறுப்பதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் எட்மண்ட் தியோ தெரிவித்துள்ளார்.
தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றது என்றும், உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் விளக்கினார்.
ஜசெக.வின் கெளரவத்தை நிலைநாட்டுவதற்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் மத்திய செயலவைக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதிலிருந்து தாம் வாபஸ் பெறுவதாகவும், கட்சியில் தாம் வகித்து வரும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகவும் எட்மண்ட் தியோ அறிவித்துள்ளார்.